×

216 குடும்பங்களுக்கு பட்டினப்பாக்கம் திட்டப்பகுதியில் 27.62 கோடியில் புதிய வீடுகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்

சென்னை: டொம்மிங்குப்பத்தில்  வசித்த 216 குடும்பங்களுக்கு பட்டினப்பாக்கத்தில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்ட புதிய குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று வழங்கினார். தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் பட்டினப்பாக்கத்தில் 400 சதுரஅடியில் தரைதளத்துடன் 4 அடுக்குமாடி குடியிருப்புகள், 11 தொகுப்புகளாக மொத்தம் 1,188 குடியிருப்புகள் 152 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது.  இந்தநிலையில், டொம்மிங்குப்பம் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 1983ல்  கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் பழுந்தடைந்துள்ளதால், அதில் வசித்த 216 குடும்பங்களுக்கு பட்டினப்பாக்கம் திட்டப்பகுதியில் 27.62 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாற்று குடியிருப்புகளில் குடியேறுவதற்கான ஒதுக்கீட்டு ஆணைகளை குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று வழங்கினார்.

இந்தநிகழ்ச்சியில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய  மேலாண்மை  இயக்குநர் ம.கோவிந்த் ராவ்,  மயிலாப்பூர் எம்.எல்.ஏ மயிலை த.வேலு,   மேற்பார்வை பொறியாளர் அ.செல்வமணி, செயற்பொறியாளர் தா.முருகேசன் உட்பட  பலர்  கலந்து கொண்டனர். மேலும், இக்குடியிருப்புகளில் அடிப்படை தேவையான சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் அகற்றும் வசதி மற்றும் மழைநீர் சேகரிக்கும் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.  ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் மின்தூக்கி மற்றும் ஜெனரேட்டர் வசதிகள்  செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Pattinapakkam ,Minister ,Thamo Anparasan , 27.62 crore new houses for 216 families in Pattinapakkam project area: Minister Thamo Anparasan issues allotment orders
× RELATED சட்டவிரோத பண பரிவர்த்தனை ஜார்க்கண்ட்...